உள்ளூர் செய்திகள்

அரசு பொருட்காட்சி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டார். அருகில் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் உள்ளனர்.

27 அரசுத்துறை அரங்குகளுடன் பொருட்காட்சி

Published On 2023-04-29 07:37 GMT   |   Update On 2023-04-29 07:37 GMT
  • 27 அரசுத்துறை அரங்குகளுடன் பொருட்காட்சி தொடங்குகிறது.
  • மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை

மதுரையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மதுரை சித்திரை பெருவிழாவை முன்னிட்டு அரசுப் பொருட்காட்சியை சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி-2023 தொடக்க விழா இன்று மாலை நடக்கிறது.

அரசு பொருட்காட்சியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசுகிறார். அமைச்சர்கள் மூர்த்தி பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு அரசுத்துறைகளை சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட 27 அரசுத்துறை அரங்குகளும், மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றில் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசு துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதேபோல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் தினந்தோறும் இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அரசு பொருட்காட்சி இன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 3.45 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து அரசு பொருட்காட்சியை கண்டுகளிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் சுஜி பிரமிளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலி தளபதி, மகேஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News