உள்ளூர் செய்திகள்

செல்போன் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவர்களால் விபத்து அபாயம்

Published On 2022-10-08 09:34 GMT   |   Update On 2022-10-08 09:34 GMT
  • செல்போன் பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை

மதுரையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சில அரசு பஸ் டிரைவர்கள் செல்போனை பார்த்துக் கொண்டே பஸ்சை ஓட்டி செல்கின்றனர்.

நேற்று மதியம் மதுரை ரெயில் நிலையம்-பெரியார் பஸ் நிலையம் இடையே அரசு பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவர் விபத்து அபாயத்தை உணராமல் செல்போனில் காட்சிகளை பார்த்தபடி ஓட்டிச் சென்றார். பஸ் டிரைவரின் அலட்சியத்தை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதேபோல் சில பஸ்டிரைவர்கள் மற்றும் ஆட்டோ, கார் வாகன டிரைவர்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் செல்போனை பார்த்தபடி வாகனங்களை ஓட்டுவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் விலை மதிப்பில்லாத மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பார்த்து கொண்டு இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரையில் சில போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.

இருசக்கர வாகனங்களை அடிக்கடி நிறுத்தி சோதனை செய்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறும் பெரிய வாகனங்கள் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதில்லை.

சாலைகளை கடந்து செல்ல பொது மக்களுக்கு உதவி புரிவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags:    

Similar News