உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

ரூ.3 கோடியே 90 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

Published On 2022-11-24 07:55 GMT   |   Update On 2022-11-24 07:55 GMT
  • திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
  • பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்துக்கு கடந்த 1957-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து அப்போதைய அமைச்சர் கக்கன் 1958 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் புதிய கட்டிடம் கட்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது.

இதற்காக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு பின்பகுதியில் தற்காலிக அலுவலகத்திற்காக ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்த நிலையில் ஏற்கனவே இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, உஷாராணி, மாயாண்டி, சாந்தி மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் தலைவர் வேட்டையன் பங்கேற்காமல் நிகழ்ச்சியை புறக்கணித்தார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் 4 கவுன்சிலர்கள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.

Tags:    

Similar News