புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை
- புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை அரசு செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் உள்ள அரசு நெல் சேமிப்பு கிடங்கில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு வரை திறந்தவெளியில் தார்பாய்கள் மூடப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் பரவலாக காணப்பட்டது. இதுபோன்று நிலைமை இருக்கக்கூடாது என்ப தற்காக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி, 18 மாதங்களில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 213 இடங்களில் சுமார் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவிற்கு ரூ. 238 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு அமைக்க ஆணை வெளியிட்டது. மேலும் தற்போது உள்ள 18000 மெட்ரிக் டன் கொள்ளளவு கப்பலூர் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 213 இடங்களில் 106 பகுதிகளில் 105 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிவு பெற்று தயார் நிலையில் உள்ளது.
நியாய விலைக் கடை ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை 3 வகையான கார்டுகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 14 லட்சம் அட்டைகள் முன்னுரிமையாக அந்தியோதயா திட்டத்தை உள்ளடக்கிய அட்டைகள், 1.04 லட்சம் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களும் அரிசி கேட்கிறார்கள்.
சர்க்கரை அட்டை தாரர்கள் 3.82 லட்சம் பேர் உள்ளனர். பொருட்கள் எதையும் வாங்காமல் 60,000 அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தத்தில் 2.23 கோடி ரேசன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளது. இதில் முன்னுரிமை அட்டைகளில் மாற்றுத்திறனாளிகள் 6.6 லட்சம் பேர் சேர்த்துள்ளோம்.
இதேபோல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 2 வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக மே-2021 முதல் தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.