உள்ளூர் செய்திகள்

கூடுதல் கட்டணம் பெறும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை

Published On 2022-11-13 07:11 GMT   |   Update On 2022-11-13 07:11 GMT
  • கூடுதல் கட்டணம் பெறும் தனியார் இ-சேவை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மின் ஆளுமை முகமையின் மூலம் 413 அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இதில் மதுரை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் திட்டம், கிராம தொழில் முனைவோர் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சான்றுகள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தினை தவிர கூடுதல் கட்டணம் பெறும் இ-சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk@tb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மற்றும் 1800 425 1333 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் சான்றிதழ்கள் பெற அரசுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்டுள்ள பயனாளர் நுழைவு வசதியினை தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதி பெறாமல் இ-சேவை பெயரில் தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய பயனாளர் நுழைவினை பயன்படுத்தி வருவாய் துறை சான்றுகள், முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்து சான்றுகளில் எழுத்து பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் கூடுதலாக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவது என பல்வேறு தரப்பில் புகார்கள் வருகின்றன.

தனியார் கணினி மையங்கள் பயனாளர் நுழைவினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, இ-சேவை என்ற பெயர் பலகை மற்றும் சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ வருவாய் மற்றும் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News