ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு
- ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகிறார்.
மேலூர்
மதுரை மாவட்டம் உத்தங்குடி சோலைமலை நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ஆனந்தி. இவர் சம்பவத்தன்று மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சிங்கம்புணரிக்கு அரசு பஸ்சில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆனந்தி பஸ்சில் நின்றுகொண்டு பயணம் செய்தார்.
அப்போது அருகில் நின்றிருந்த மர்மநபர் ஆனந்தி கைப்பையில் இருந்த 4½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினார். மேலூர் பஸ் நிலையத்தில் பார்த்தபோது ஆனந்தி வைத்திருந்த நகை திருடுபோய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகிறார்.
மாட்டுத்தாவணி-மேலூர் வழித்தடத்தில் அரசு பஸ்சில் ஏறும் சமூக விரோதிகள் பயணிகளின் நகை, பணத்தை திருடுவது தொடர் கதையாக உள்ளது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என பாதிக்கப் பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.