உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்தவர் கைது - 1.48 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல்

Published On 2022-10-22 08:54 GMT   |   Update On 2022-10-22 08:54 GMT
  • இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர்.
  • சாக்குமூட்டையில் வைத்திருந்த சுமார் 1.48 லட்சம் மதிப்பிலான 3615 லாட்டரி டிக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் நின்று லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் லாட்டரி டிக்கெட்டுகளை கேரளாவில் இருந்து கடத்தி வந்து பாவூர்சத்திரம் பகுதிகளில் விற்பனை செய்த தென்காசி டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் நந்தகுமார் (வயது 49) என்பதும் அவர் சாக்குமூட்டையில் வைத்திருந்த சுமார் 1.48 லட்சம் மதிப்பிலான 3615 லாட்டரி டிக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் ரொக்கம் ரூ. 30,000-தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் லாட்டரி டிக்கெட்டுகளை கேரளாவில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்கு மூளையாக செயல்பட்டு வந்த தென்காசி மேலகரத்தை சேர்ந்த மற்றொரு நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News