புதுப்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதி இன்றி விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
- சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- தப்பி ஓடிய வாலிபர் ஆனந்தன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாளையம் கிராமம் ஆரணி ஆற்றில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆரணி காவல் நிலைய போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது புதுப்பாளையம் ஆரணி ஆற்றின் அருகே ஒருவர் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்துகொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அங்கு சென்றபோது மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த பனையஞ்சேரியைச் சேர்ந்த ஆனந்தன்(வயது35) என்ற வாலிபர் போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு தப்பி ஓடி விட்டார். எனவே, போலீசார் அங்கிருந்த 1,020 மது பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர் ஆனந்தனை வலை வீசி தேடி வருகின்றனர்.