உள்ளூர் செய்திகள்

படிக்கும் காலத்திலேயே 'லெஸ்பியன்' உறவு: கல்லூரி மாணவியுடன் குடும்பம் நடத்திய பெண் என்ஜினீயர்

Published On 2022-11-10 08:00 IST   |   Update On 2022-11-10 08:00:00 IST
  • இருவரிடமும் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
  • கல்லூரி மாணவி கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தன.

தர்மபுரி :

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், மாணவி மாயம் என வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் கோவையில் இளம்பெண் ஒருவருடன் அந்த கல்லூரி மாணவி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் கோவை விரைந்து சென்றனர். அங்கு இருந்த கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவி கூறிய தகவல்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தன. அதன் விவரம் வருமாறு:-

நான் சேலத்தில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறேன். நான் 2-ம் ஆண்டு படிக்கும் போது எங்களது கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிக்கும் ஏரியூர் மாணவியுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. முதலில் சாதாரணமாகத்தான் பழகினோம்.

நாளடைவில் எங்களை அறியாமல் இருவருக்கும் இடையே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் நெருங்கி பழக தொடங்கினோம். ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டோம். நாங்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் சந்தித்து கொண்டோம்.

அந்த மாணவி படிப்பை முடித்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு நாங்கள் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. இருந்தாலும் விடுமுறை நாளில் அவளும், நானும் சந்தித்து வந்தோம்.

எங்களது விவகாரம் என்னுடைய பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் என்னை கண்டித்தனர். என் தோழியை சந்திக்க கூடாது என்று தடை போட்டனர். ஆனால் என்னால் அவளையும், அவளால் என்னையும் மறக்க முடியவில்லை. எனவே நாங்கள் வீட்டை விட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியேறினோம்.

கோவைக்கு வந்த நான், தோழியுடன் தனியாக வீடு எடுத்து தங்கினேன். கடந்த 10 நாட்களாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தோம். வரும் நாட்களில் எங்களால் பிரிந்து வாழ முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது என்று போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

இளம்பெண் 2 பேரும் ஒருவர் மீது ஒருவர் தீரா காதல் கொண்டு இருப்பதை அறிந்த போலீசார் இருவரிடமும் சாதுர்யமாக பேசி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு இருவரிடமும் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் அவர்களிடம், நீங்கள் இருவரும் வாழ வேண்டியவர்கள். உங்களுக்கு என்று கணவன், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கை இருக்கிறது. இந்த லெஸ்பியன் உறவு நம்முடைய கலாசாரத்துக்கு சரிவராது என்று கவுன்சிலிங் கொடுத்ததாக தெரிகிறது.

போலீசாரின் ஆலோசனைக்கு பிறகு, தான் செய்தது தவறு என பெண் என்ஜினீயர் உணர்ந்ததாக தெரிகிறது. உடனே கழிப்பறை செல்வதாக கூறி விட்டு சென்றார். திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு போலீசார் சென்றனர். அங்கு அந்த பெண் என்ஜினீயர் கழுத்து, கைகளில் பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதைக்கண்டு பதறிப்போன போலீசார் பெண் என்ஜினீயரை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீனா விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றார். கல்லூரி மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News