உள்ளூர் செய்திகள்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா- கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது

Published On 2022-06-29 09:14 GMT   |   Update On 2022-06-29 09:14 GMT
  • கோவிலின் கொடை விழா வருகிற 12-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
  • பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் கிழமை ஆனி கொடை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோவிலின் கொடை விழா வருகிற 12-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.

அதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நித்திய பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு கால்நாட்டு விழாவை முன்னிட்டு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேற்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய 'கால்நாட்டு' விழா நடைபெற்றது.

தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடைவிழா தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் நேற்று முதல் விரதத்தை தொடங்கினார்கள்.

கால்நாட்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட அறநிலை துறை இணை ஆணையர் அன்புமணி, ராஜேந்திரன், ஜெகதீசன், முத்துமாலை, சப்தசாகரன், ஜெயசங்கர், சந்திரசேகரன், கல்யாணசுந்தரம், ராஜகோபால், துரைராஜ், குணசேகரன், செல்வராஜ், பாலகிருஷ்ணன், ஈஸ்வரன், பெரியசாமி, ஆர்.பெரியசாமி, கேசவமூர்த்தி, சிவசுப்பிரமணியன், ஸ்ரீதர், அர்ஜூன் பாலாஜி, துரை, ரவி, முத்துக்குமார், கார்த்திகேயன், ஜெயபிரகாஷ், பஞ்சாயத்து தலைவர் ஜெயமுருகன், ஜெகநாதன், முத்துகிருஷ்ணன் மற்றும் 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் ஆகியோர் செய்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி போலீசார் பாதுகாப்பு பணியினை செய்து இருந்தனர்.

Tags:    

Similar News