கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார கோரிக்கை
- மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து நெல், ராகி உள்ளிட்ட மூட்டைகள் நனைந்து வீணாகிறது.
- பொதுப்பணித்துறை சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பேட்டபனூர் கால்நடை மருத்துவ மனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதால் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும். வேப்பனப்பள்ளியில் உள்ள வேளாண்மை அலுவலகம் கட்டிடம் சேதமாகி உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து நெல், ராகி உள்ளிட்ட மூட்டைகள் நனைந்து வீணாகிறது. எனவே, வேளாண்மை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்.
பாரூர் ஏரியின் கீழ் பொதுப்பணித்துறை சொந்தமான இடங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து அவ்வழியே பொதுமக்கள் சென்று வர இடையுறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுப்பணித்துறை சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வார வேண்டும்.
மேலும் நீர்நிலைகள், நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிகளவில் காய்கறிகள் விளைவிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்க வேண்டும். போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுக்க தகவல் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் சரயு பேசியதாவது:-
இ-நாம் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை கூடங்களில் மாங்காய்கள் விற்பனை செய்யலாம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகள் சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கட்டண விவரங்களுடன் தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.