உள்ளூர் செய்திகள்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

Published On 2023-10-27 11:41 IST   |   Update On 2023-10-27 11:43:00 IST
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

கரூர் 

கரூர் மாவட்டம் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பள்ளி அளவில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணிக்கையில் இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்ட 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பள்ளித் தாளாளர் மோகனரங்கன் தலைமையில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினரும், லயோலா கல்லூரி இயற்பியல் பேராசிரியருமான அறிவியல் கல்வியாளர் ஜோசப் சிறப்புரையாற்றினார்.

பரணி பார்க் கல்விக் குழுமச் செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர், கரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயலாளர் ஜான் பாட்சா, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பிரேம்குமார் முன்னிலை வகித்தனர்.

மொத்தம் 1186 அறிவியல் ஆய்வுகளை 152 வழிகாட்டி ஆசிரியர்கள் உதவியுடன் 2372 குழந்தை விஞ்ஞானிகள் இன்றைய அறிவியல் அமர்வுகளில் சமர்ப்பித்தனர். அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற பிரபல அறிவியலாளர்கள் பெயரிலான 71 அறிவியல் அரங்குகளில் இணை அமர்வுகளாக நடைபெற்ற இப்பிரம்மாண்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இளம் விஞ்ஞானிகளின் அறிவியல் ஆய்வுகளை 142 பயிற்சி பெற்ற நடுவர்கள் மதிப்பிட்டனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் கரூர் மாவட்ட செயலாளரும் தமிழக முன்னோடி கல்வியாளருமான முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் தலைமையில் பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர் உள்ளிட்ட 25 பேர் கொண்ட மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 17-வது ஆண்டாக சிறப்பான பயிற்சியளித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

ஏற்கனவே பரணி கல்விக் குழும இளம் விஞ்ஞானிகள் பல்வேறு தேசிய அளவிலான அறிவியல் மாநாடுகளில் தமிழகம் சார்பாக ஆறு முறையும், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் நிகழ்வுகளில் இந்தியா சார்பாக இரண்டு முறையும், மாநில அறிவியல் மாநாடுகளில் கரூர் மாவட்டம் சார்பாக தொடர்ந்து பதினேழு முறையும் சிறப்பாகப் பங்கு பெற்று கரூர் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News