பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
- பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தை அடைந்தது.
- பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புகழூர் நகராட்சிப் பொறியாளர் மலர்கொடி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி வளாகத்தை அடைந்தது.
பேரணியில் டெங்கு ஒழிப்பு குழுவினர், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். பேரணியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கடைக்காரர்கள், வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர் விற்பனை செய்யவும், பயன்படுத்துவும் கூடாது என்றும், புகழூர் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ,எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதேபோல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கும். மேலும் தெருக்களில் கிடக்கும் தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள் , பழையபாட்டில்கள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு மழைநீர் தேங்கினால் அதில் கொசுக்கள் தங்கி முட்டையிட்டு ஏராளமான கொசுக்களை உற்பத்தி செய்து பொதுமக்களை தீண்டும். அவ்வாறு பொது மக்களை கொசுக்கள் தீண்டுவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் துப்புரவு ஆய்வாளர்வள்ளி முத்து, பணி மேற்பார்வையாளர் ரவி மற்றும் டெங்கு ஒழிப்பு குழுவினர், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.