அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
- வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
- 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவி ல், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் ஆகிய கோவில்களில் உள்ள கால பைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் ஆடி மாத வளர்பிறை தேய்பிறையை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.