உள்ளூர் செய்திகள்

பேருந்து நிழற்குடை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2022-07-08 12:03 IST   |   Update On 2022-07-08 12:03:00 IST
  • பேருந்து நிழற்குடை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

கரூர் :

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, வடக்கு பாளையம் கிராமத்தில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1996 - 2001ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை உள்ளது. இதற்குப் பின்புறம் திருமூர்த்தி என்பவர் இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பேருந்து நிழற்குடை இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி, இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் கொண்டு தரைமட்டமாக இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு பாளையம் பகுதி கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் விைரந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பேருந்து நிழற்டையை புதிதாக அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News