உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே ஓடும் பஸ்சில் குழந்தையின் கை செயின் திருட்டு

Published On 2023-09-22 07:37 GMT   |   Update On 2023-09-22 07:37 GMT
  • கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.
  • திங்கள்நகர் பஸ் நிறுத்தம் வந்த அவர்கள் அங்கிருந்து மடவிளாகம் செல்ல இலவச அரசு பஸ்சில் ஏறினர்.

இரணியல்:

கண்டன்விளையை அடுத்த மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சுபிதா (வயது 27). இவர் நேற்று காலை தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வழிபாடுகளை முடித்து விட்டு மாலை வீட்டிற்கு கிளம்பினர். மண்டைக்காட்டில் இருந்து திங்கள்நகர் பஸ் நிறுத்தம் வந்த அவர்கள் அங்கிருந்து மடவிளாகம் செல்ல இலவச அரசு பஸ்சில் ஏறினர். பஸ்சை திக்கணங்கோடு அன்பழகன் ஓட்டினார். பஸ் இரணியல் நீதிமன்றம் அருகில் சென்றபோது சுபிதாவின் குழந்தை கையில் கிடந்த தங்க கைச்செயினை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுபிதா கண்டக்டரிடம் கூறினார். உடனடியாக பஸ் நெய்யூர் தபால் நிலையம் அருகில் ஓரங்கட்டப்பட்டது.

இதுகுறித்து அருகில் உள்ள இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பஸ்சை திங்கள்நகர் பஸ் நிறுத்தம் கொண்டு வந்து சோதனை நடத்தினர். பெண் போலீஸ், ஆண் போலீஸ் என தனித்தனியாக சோதனை செய்தனர். இருந்தும் நகை எதுவும் சிக்கவில்லை. பயணிகளிடம் நடத்திய விசாரணையில் இரணியல் நீதிமன்றம் பஸ் நிறுத்தத்தில் 2 பெண்கள் வேகமாக இறங்கி சென்ற தகவல் கிடைத்தது. அந்த பெண்கள் தான் குழந்தையின் கை செயினை நைசாக திருடி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பஸ்சில் பயணம் செய்த கைகுழந்தையின் பிரேஸ்லெட்டை மர்ம நபர்கள் நைசாக திருடி சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News