உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 2 டன் ரேசன் அரிசி.

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2023-03-14 08:27 GMT   |   Update On 2023-03-14 08:27 GMT
டிரைவர் உள்பட 2 பேர் கைது

நாகர்கோவில், மார்ச்.14-

குமரி மாவட்டம் வழியாக கேரளா வுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வருவாய் துறை அதிகாரிகளும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி தலைமையிலான போலீசார் இன்று காலை இருளப்பபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த டெம்போவை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்கவில்லை. வேகமாக சென்றது. இதையடுத்து போலீசார் தங்களது வாகனம் மூலமாக டெம்போவை துரத்தி சென்று பீச்ரோடு சந்திப்பில் வைத்து மடக்கிப் பிடித்தனர். டெம்போவை போலீஸ் மடக்கியதும் டெம்போவில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். எனினும் துரிதமாக செயல்பட்ட போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து டெம்போவை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 2,100 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது தெரியவந்தது.

அந்த ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரித்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் டெம்போ டிரைவரான கோட்டாரை சேர்ந்த தளபதி (வயது 52) என்பவரையும், தப்பி செல்ல முயன்ற கிளினரான பன்னீர் செல்வம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ரேஷன் அரிசியை டெம்போவோடு சேர்த்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News