திருவட்டார் அருகே இரு தரப்பினர் மோதல்; வாலிபருக்கு அரிவாள் வெட்டு
- போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே உள்ள தலைகாட்டுவிளை ஹேமானூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 23), பிளம்பர். இவருக்கும், ராஜ்குமார் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியை எடுத்து வந்து தாக்கினாராம். இதில் ரமேஷ் காயம் அடைந்தார். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் ராஜ்குமார் சேதப்படுத்தினாராம்.
அரிவாள் வெட்டை தடுக்க வந்த சிம்சன் என்பவர் தடுக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் அவரும் மணிகண்டன், பிரசாந்த் ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் ராஜ்குமார் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த ராஜ்குமார் மற்றும் ரமேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.