உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று

Published On 2022-10-03 14:36 IST   |   Update On 2022-10-03 14:36:00 IST
  • 3500 படகுகள்- வள்ளங்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை
  • துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

இதுபோல கடற்கரை கிராமங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் இன்று காலை கடலுக்கு செல்ல வேண்டிய படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டன.

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தில் சுமார் 350 விசை படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இன்று காலை இந்த படகுகள் அனைத்தும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டன.

இதுபோல குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும் இன்று கடலுக்கு குறைந்த அளவே விசைபடகுகள் கடலுக்கு சென்றது. 150-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

குளச்சல் பகுதியிலும் குறைந்த அளவே வள்ளங்கள், பைபர் படகுகள் கடலுக்கு சென்றன. மாவட்டம் முழுவதும் சுமார் 3500 விசைபடகுகள், வள்ளங்கள், பைபர் படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரியை அடுத்த வாவத்துறை, ஆரோக்கிய புரம், மணக்குடி பகுதிகளிலும் இன்று சில பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இதுபோல குளச்சல் பகுதியிலும் ஒரு சில இடங்களில் கடல் சீற்றமும், அலைகளின் கொந்தளிப்பும் காணப்பட்டது.

Tags:    

Similar News