உள்ளூர் செய்திகள்

மண்ணென்ணை பாட்டிலுடன் புனித தேவ குமார்

சாலையை சீரமைக்க போராட்டம் அறிவிப்பு

Published On 2022-10-31 17:16 IST   |   Update On 2022-10-31 17:16:00 IST
  • தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் வந்த வக்கீல் கைது
  • பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததினால் நடவடிக்கை

கன்னியாகுமரி:

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் புனித தேவ குமார் இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

இவர் 14.10.2022 அன்று மண்ணெண்ணை பாட்டிலுடன் தான் தீ குளிக்க போவதாக அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான குழித்துறையில் இருந்து மடிச்சல் செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுமார் 3 வருடமாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சரி செய்ய பல முறை புகார் அளித்தும் குழித்துறை நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் இந்த மாதம் 30-ந் தேதி சாலையை செப்பனிட வில்லை என்றால் தான் 31-ந் தேதி குழித்துறை சந்திப்பில் தீ குளிக்க போவதாக மண்ணெண்ணை பாட்டிலுடன் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் விடுத்திருந்தார்.

அந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் அவரிடம் சில நாட்களில் சாலையை செப்பனிடுவோம் என்றும், இப்போது எங்களிடம் போதிய நிதி இல்லை என்றும் பேச்சு வார்தையில் ஈடுபட்டு வந்தனர். அதற்கு உடன்படாத அவர் இன்று காலை தீ குளிப்பதற்காக மண்ணெண்ணை பாட்டிலுடன் தனது வீட்டில் இருந்து கிளம்பிய போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததினால் அவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News