உள்ளூர் செய்திகள்

திங்கள் நகர் பஸ் நிலையத்தில் மது போதையில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள்

Published On 2023-03-18 07:00 GMT   |   Update On 2023-03-18 07:00 GMT
  • புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தல்
  • குளச்சல் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வந்து கண்காணித்து வந்தனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் திங்கள் நகரும் ஒன்று. இங்கு ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவ மனைகள் ஏராளம் உள்ளது.

திங்கள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இரணியல், நெய்யூர் பகுதிகளில் உள்ள மக்கள் பொருள்கள் வாங்கவும், வங்கி பணிகளுக்கும் திங்கள் நகர் வருவது வழக்கம். இப்பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் நாகர்கோவில், கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். திங்கள் நகர் பஸ் நிலையத்தில் இருந்துதான் இவர்கள் அனைவரும் பஸ் ஏறி செல்ல வேண்டும்.

இதனால் திங்கள் நகர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பெண்கள், குழந்தைகள், மாணவ-மாணவிகள் என அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய பஸ்சை எதிர்ப்பார்த்து நிற்பார்கள்.

பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் எதுவும் செல்ல கூடாது என்று திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவிட்டார். இதனால் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் செல்வது குறைந்தது. மேலும் இதனை குளச்சல் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வந்து கண்காணித்து வந்தனர்.

மேலும் போலீசார் சோதனையில் அத்துமீறும் வாகனங்களுக்கு அபரா தமும் விதிக்கப்பட்டது. பஸ் நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபோல பஸ் நிலையத்தில் இரணியல் போலீசாரும் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இல்லாத நேரத்தில் இப்போது போதை நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் அதிக போதையில் பஸ் நிலைய ஓய்வறை பகுதியில் மயங்கி கிடப்பதும், பயணிகள் மற்றும் பெண்கள் நிற்கும் பகுதியில் விழுந்து கிடக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இன்னும் சிலர் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் பகுதியில் கூட விழுந்து கிடக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

இன்னும் சிலர் போதையில் ஆபாசமாக பேசியபடி பஸ்நிலையத்தில் சுற்றி வருகிறார்கள். பஸ்சுக்கு காத்திருக்கும் பெண்கள் மற்றும் மாணவிகள் இதனை கண்டு பயந்து ஓடும் சம்பவங்கள் நடக்கிறது. முதியவர்கள் இதனை பார்த்து முகம் சுழித்தப்படி செல்கிறார்கள்.

திங்கள் நகர் பஸ் நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இங்கு எப்போதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக திங்கள் நகர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இரணியல் போலீசார், குளச்சல் போக்குவரத்து காவல் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக திங்கள் நகர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து அங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பபடி இங்கு புறக்காவல் நிலையம் அமைத்தால் அசம்பாவிதங்களை தடுப்பதோடு, போதை நபர்களால் ஏற்படும் தொல்லையும் முடிவுக்கு வரும்.

Tags:    

Similar News