உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா

Published On 2023-05-01 12:13 IST   |   Update On 2023-05-01 12:13:00 IST
  • காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும், நிவேத்திய பூஜையும் நடக்கிறது.
  • அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சி

கன்னியாகுமரி, மே.1-

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா வருகிற 5-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக் கிறது. அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடக்கிறது.

அதன் பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்க ளுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News