உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த மூதாட்டி

Published On 2023-06-19 07:49 GMT   |   Update On 2023-06-19 07:49 GMT
  • மனு கொடுக்க வருபவர்களை பலத்த சோதனைக்கு பிறகே மனு கொடுக்கும் மையத்திற்கு அனுப்புவார்கள்
  • மூதாட்டி வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது, அதில் பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்தது.

நாகர்கோவில் :

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவல கங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மாவட்டத்தின் பல்ேவறு பகுதி மக்களும் மனு கொடுப்பது வழக்கம்.

மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வரும் சிலர், தீக்குளிப்பது உள்ளிட்ட விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், மனு கொடுக்க வருபவர்களை பலத்த சோதனைக்கு பிறகே மனு கொடுக்கும் மையத்திற்கு அனுப்புவார்கள்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள், மனு கொடுக்க வருபவர்களை தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர்.

இன்று (திங்கட்கிழமை) என்பதால் காலையிலேயே பலரும் மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து அவர்கள் வந்திருந்தனர். அவர்களையும் அவர்களது உடமைகளையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பலத்த சோதனை செய்தனர்.

அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், கையில் பையுடன் வந்தார். அவரை போலீசார் வழக்கம் போல் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையை வாங்கி பார்த்தபோது, அதில் பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மூதாட்டியை அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் ரோஸ்லி என்பதும், காரங்காடு அருகே உள்ள மேல ஆலங்கோடு பகுதியை சேர்ந்த சூசை மிக்கேல் மனைவி என்பதும் தெரியவந்தது. மகனுக்கு எழுதிக்கொடுத்த சொத்தை ரத்து செய்வது தொடர்பாக மனு கொடுக்க வந்ததாக அவர் கூறினார். இது தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News