மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 77 அடியில் வந்த பிறகு மட்டுமே மறுகாலை திறக்க நடவடிக்கை
நாகர்கோவில், நவ.16-
நாகர்கோவில் கலெக் டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்க இணை பொறியாளர் சிவகாமி, வேளாண் துறை அதிகாரி வாணி மற்றும் விவசாயிகள் வின்ஸ்ஆன்றோ, புலவர் செல்லப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவசாயி களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம் விதைகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருமனை அரசு ஆஸ்பத்திரியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் வனத்துறையினர் குரங்குகளை அந்த பகுதியில் விட்டு செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் 48 அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 77 அடியில் வந்த பிறகு மட்டுமே மறுகாலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிபி சேனல் பகுதியில் கடந்த 10 நாட்களில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சானல்களை தூர்வாரி தூய்மைப்படுத்தி இருந்தால் உடைப்பு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகத்தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை பகுதியை சுற்றுலாதலமாக மாற்றக்கூடாது. பொது பணித்துறைக்கு சொந்தமான இடங்களை ஊராட்சிக்கு வழங்கக்கூடாது.மாம்பழத்துறையாறு அணைப்பகுதியை சுற்றி உள்ள இடங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு பகுதியை வேறு உபயோகத்திற்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.அதை வேறு உபயோகத்திற்கு வழங்கக்கூடாது. நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடந்து முடிந்து தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவது போன்ற அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈசாந்திமங்கலம், வடக்கு மாங்குளம் பகுதியில் மறுகால் ஓடை முட்புதர்நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மலைப்பாம்புகள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே அந்த முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் தேங்காய் விவசாயிகள் அதிகமானோர் உள்ளனர். தேங்காய்க்கு கிலோ ரூ.35 நிர்ணயம் செய்ய வேண்டும். நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்தது போல் தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே தென்னை விவசாயத்தை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், திருப்பதிசாரம் விதை நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விவசாயிகளுக்கு தரமான விதை வழங்கப்பட்டு வருகிறது. டி.பி.எஸ்.4 குறுகிய கால நெற்பயிர்கள் 95 நாட்களில் அறுவடை செய்யப்படும். குறுகிய கால பயிர்கள் குறைவான அளவில் மகசூல் கிடைக்கும். நீண்டகால பயிர்களுக்கு தான் மகசூல் அதிக அளவில் கிடைக்கும்.
டி.பி.எஸ். 5 ரக நெற்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு பலமுறை அறிவுறுத்தி உள்ளோம். இந்த நெல் பயிரை சாகுபடி செய்யும் போது மகசூல் அதிகம் கிடைப்பதுடன் எந்த மழை பெய்தாலும் நெற்பயிர்கள் சாய்ந்து தரையில் விழாத நிலையில் இருக்கும். ஆனால் அம்பை 16 பயிர் செய்தால் மழை நேரங்களில் அந்த நெல் சாய்ந்து விடும். குரங்குகள் வனப்பகுதியில் மட்டுமே விடப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் பி.பி. சேனலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள 11 ஏக்கர் நிலத்தை அவர்களே பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தேங்காய் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக திட்டம் எதுவும் தற்போது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.