மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்வதை படத்தில் காணலாம்.
நாகர்.கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி
- வீட்டுமனை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி
- தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார். மனுக்கள் வழங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
அப்போது திட்டுவிளை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்தனர். பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றினார்கள். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் வீட்டுமனை பிரச்சனை இருந்து வந்த நிலையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மனு அளிக்க வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த பிறகு கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். தண்ணீர் பாட்டிலுடன் வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.
பாட்டில்களில் என்ன உள்ளது என்பதை குறித்து முகர்ந்து பார்த்து சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள். கார்களில் வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பும் டிரைவர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்றும் முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.