உள்ளூர் செய்திகள்

நடிகர் போல பேஸ்புக்கில் பழகி காஞ்சிபுரம் பெண்ணின் படத்தை ஆபாசமாக மாற்றி ரூ.2 லட்சம் பறிப்பு- சகோதரர்கள் கைது

Published On 2023-03-11 08:04 GMT   |   Update On 2023-03-11 08:04 GMT
  • பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார்.
  • விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

காஞ்சிபுரம்:

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன். இவர் நடிகர் ஒருவரின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கினார்.

பின்னர் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்பு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட பெண்ணிடம் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் நன்றாக பேசி பழகி வந்துள்ளார்.

அப்பெண்ணின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வாங்கிக் கொண்ட அலாவுதீன் அதனை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், குடும்பத்தினருக்கும் தெரிவித்து விடுவதாகவும் கூறி மிரட்டி சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் பறித்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி ஈரோடு பிபி. அக்ரகாரம் பகுதியை சேர்ந்த அலாவுதீன், அவருக்கு உதவியாக இருந்த சகோதரர் வாகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரித்தபோது சமூக வலைதளங்களில் நட்புடன் பழகி பல பெண்களிடம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று அலாவுதீன், வாகித் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News