உள்ளூர் செய்திகள்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நடந்த காட்சி.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா

Published On 2023-11-24 08:53 GMT   |   Update On 2023-11-24 08:53 GMT
  • காட்டில் நம்பாடுவானை வழிமறித்த பிரம்ம ராட்ஷசன் அவரை உண்ண போவதாக கூறி உள்ளான்.
  • நம்பாடுவான் தான் பாடிய கைசிகம் என்ற பாட்டின் பலனை ராட்ஷசனுக்கு கொடுத்து அவருக்கு சாபவிமோசனம் அளித்தார்.

களக்காடு:

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், கைசிக விருத்தாந்த தலமாகவும் திகழ்கிறது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை மாதம் நடைபெறும் கைசிக ஏகாதசி விழா முக்கியமானதாகும். முன் காலத்தில் கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி அன்று இரவில் நம்பாடுவான் என்பவர் நம்பி பெருமாளை கவி பாடி தரிசனம் செய்ய சென்ற போது, காட்டில் அவரை வழிமறித்த பிரம்ம ராட்ஷசன் அவரை உண்ண போவதாக கூறி உள்ளான்.

இதைக்கேட்ட நம்பாடுவான் நம்பியை நினைத்து விரதம் மேற்கொண்டுள்ளதால் நம்பியை தரிசனம் செய்த பின் உனக்கு இரையாக நான் தயார் என்று கூறினார். ராட்ஷசனும் நீண்ட நேரத்திற்கு பின் அவரை அனுப்பினான். நம்பாடுவான் நம்பியை தரிசனம் செய்த பின் காட்டிற்கு வந்து ராட்ஷசனிடம் இனி என்னை உணவாக்கிக் கொள் என்றார்.

அப்போது ராட்ஷசன் தனக்கு பசியில்லை என்று கூறினான். நம்பாடுவான் தான் பாடிய கைசிகம் என்ற பாட்டின் பலனை ராட்ஷசனுக்கு கொடுத்து அவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அந்த நாள்தான் கைசிக ஏகாதசி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு விழா நேற்று கோலாகலத்துடன் நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு திருவாராதனம் நிகழ்ச்சிக்கு பிறகு இரவில் பெருமாள் வாகனத்தில் எழுந்தருளி கைசிக மண்டபத்திற்கு சென்றார்.

அதனைதொடர்ந்து டி.வி.எஸ். நிறுவன குழுமங்கள் சார்பில், நாட்டிய கலைஞர்கள் கைசிக புராண நாடகத்தை நடத்தினர்.இரவு விடிய, விடிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News