கழுத்தில் மணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள்.
கழுத்தில் மணியை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
- மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் மணியை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- காளைகளுக்கு சந்தனம், குங்குமம் பூச அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை
மதுரை முடக்கத்தான் பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு பயிற்சி மைய தலைவர் மணி என்பவரது தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள், காளை உரிமையாளர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் கழுத்தில் மணியை கட்டிக்கொண்டு நுழைவு வாயில் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவில் ஜல்லிக்கட்டு காளைகளை குல தெய்வமாக கருதி வளர்த்து வருகிறோம். ஜல்லி க்கட்டு போட்டியின்போது காளைகளுக்கு சந்தனம், குங்குமம் திருநீரு பூசக்கூடாது. சலங்கை மணியை கழுத்தில் கட்டக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதிக்கின்றனர். இது எங்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு சந்தனம், குங்குமம் பூசவும், சலங்கை மணியை கழுத்தில் அணிவிக்க அனு மதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.