உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் 20 இடங்களில் தனியார் ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறை சோதனை

Published On 2022-06-07 07:11 GMT   |   Update On 2022-06-07 07:11 GMT
  • சென்னையில் வடபழனி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை உள்பட பல இடங்களில் ஸ்கேன் சென்டர்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
  • ஸ்கேன் சென்டர்களில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகின்றன.

சென்னை:

பிரபல தனியார் ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் தனியார் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது.

மருத்துவர்களின் அறிக்கை அடிப்படையில் நோயாளிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் பல்வேறு பகுப்பாய்வு இந்த சோதனை கூடங்களில் நடக்கிறது. சென்னையில் வடபழனி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை உள்பட பல இடங்களில் இந்த ஸ்கேன் சென்டர்களில் இன்று காலையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.

மேலும் இந்த ஸ்கேன் சென்டர்களில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகின்றன. வரி ஏய்ப்பு செய்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்படுவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு மையங்களிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் ரகசியமாக இந்த சோதனையை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அங்கு பணிபுரியக்கூடிய முக்கிய டாக்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் விசாரணை நடக்கிறது. வருமானத்துறைக்கு வந்த முக்கிய ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News