உள்ளூர் செய்திகள்

தோலம்பாளையம் பெரியபள்ளத்தில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்

Published On 2023-04-18 14:22 IST   |   Update On 2023-04-18 14:22:00 IST
  • தற்போது 75 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.
  • நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் பாதையில் பெரியபள்ளம் பகுதியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கியது.

இந்த நிலையில் தடுப்பணை கட்டும் பணிகள் விறுவிறுவென நடைபெற்று தற்போது 75 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.

இன்னும் 10 தினங்களில் தடுப்பணை கட்டும் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

தோலம்பாளையம் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்டினால் மழைக்காலங்களில் வீணாகும் மழை நீரை சேமித்து வைக்க இயலும்.

இதனால் தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும்.

இதனால் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என தாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியில் தடுப்பணை கட்ட அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பகுதியில் நீர் வழித்தடங்கள் புதர் மண்டி காணப்படுகிறது.

இதனை அகற்றினால் மட்டுமே இப்பகுதியில் தடுப்பணை கட்டுவதன் நோக்கம் நிறைவேறும். அதனை செய்யாமல் தடுப்பணை கட்டி என்ன பயன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News