உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் மாணவர்களின் சாகச பயணத்தால் விபத்தில் சிக்கும் அப்பாவி மக்கள்

Published On 2023-09-26 12:51 IST   |   Update On 2023-09-26 12:51:00 IST
  • பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஹெல்மெட் அணியாமலும், ஒரே பைக்கில் 3 முதல் 4 மாணவர்கள் வருவதும் நடந்து வருகிறது.
  • போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்டவற்றை விதித்து விபத்துகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்கள் ஓட்டக்கூடாது என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என மாவட்ட கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இருந்தபோதும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இதனை கண்டுகொள்வதில்லை. பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஹெல்மெட் அணியாமலும், ஒரே பைக்கில் 3 முதல் 4 மாணவர்கள் வருவதும் நடந்து வருகிறது. மாலையில் பள்ளி முடிந்து செல்லும்போது சாகச பயணம் மேற்கொள்வதாக நினைத்து ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு பைக் ஓட்டிச்செல்வதால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

இவர்களை பார்த்து மற்றவர்களும் விதிமீறி பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. திண்டுக்கல் நகரை பொறுத்தவரை பெரும்பாலான சாலைகள் குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உடையதாகவும் உள்ளது. பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சாலைகளை கடந்து செல்வதே மிகவும் சிக்கலான விசயமாக இருந்து வருகிறது. இதுபோன்ற சாலைகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விதிமீறி பயணம் செய்து தாங்களும் விபத்தில் சிக்கி மற்றவர்களையும் விபத்தில் சிக்கவைத்து விடுகின்றனர்.

போக்குவரத்து போலீசார் அவ்வப்போது விதிமீறும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தாலும் இதுபோன்ற சம்பவம் தினசரி நடந்து வருகிறது. எனவே இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்டவற்றை விதித்து விபத்துகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News