உள்ளூர் செய்திகள்

இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ள முதல் தனியார் ராக்கெட்டை படத்தில் காணலாம்.

முதல் தனியார் ராக்கெட் 18-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Published On 2022-11-16 02:27 GMT   |   Update On 2022-11-16 02:27 GMT
  • இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும்.
  • இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

சென்னை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுவதுமாக தனியாரால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வருகிற 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு 'மிஷன் பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது.

ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை. வருகிற 18-ந்தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட், வெளிநாட்டைச் சேர்ந்த செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.

3 நிலைகளை கொண்ட ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள 480 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். பூமியில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

Similar News