சேலம் மார்க்கெட்டுக்கு பப்பாளி பழங்கள் வரத்து அதிகரிப்பு
- சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பப்பாளி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.
- சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 டன் வரை விற்பனைக்கு வருகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கொளத்தூர், பெரியதண்டா, வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், தம்மம்பட்டி, ஓமலூர், மேச்சேரி , பேளூர், தும்பல், பாப்பநாயக்கன்பட்டி, கருமந்துறை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பப்பாளி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் பப்பாளி பழங்கள் சேலம் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 டன் வரை விற்பனைக்கு வருகிறது.
தற்போது பெய்து வரும் தொடர் மழை மற்றும் குளிர் காலம் காரணமாக அனைத்து பகுதிகளிலும் பப்பாளி பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு பப்பாளி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு விற்பனைக்கு வரும் பப்பாளி பழங்களை சில்லறை விற்பனையாளர்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ பப்பாளி பழங்கள் ரூ.20, ரூ.25, ரூ.30, என அளவைப் பொறுத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். குறிப்பாக பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. அடுத்து வரும் சில மாதங்களுக்கு பப்பாளி பழங்கள் சீசன் இருக்கும் எனவும், அது வரையில் அதிகளவில் வரத்து இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.