கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் தூக்குபோட்டு தற்கொலை
- சின்னசாமிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனைவி வீட்டின் வெளியே இருந்தபோது அவர் உள்ளே சென்று திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சின்னசாமி (வயது30). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சரஸ்வதி (23).
இந்த நிலையில் சின்னசாமிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த சின்னசாமி, தனது மனைவி வீட்டின் வெளியே இருந்தபோது அவர் உள்ளே சென்று திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சரஸ்வதி உள்ளே சென்று பார்த்தபோது தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.
இந்த சம்பவம் குறித்து சரஸ்வதி பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சிக்கபடகாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது40). தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.
இந்த நிலையில் காசிலிங்கத்திற்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பெண் குழந்தைகளை விட்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த காசிலிங்கம் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து காசிலிங்கத்தின் தந்தை நாராயணன் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காசிலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.