உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரையில் தனியார் சேமிப்பு நிறுவனத்தில் பணம் மோசடி

Published On 2022-06-11 15:39 IST   |   Update On 2022-06-11 15:39:00 IST
  • சேமிப்பு கணக்குகளை துவங்கி வாடிக்கையாளர்களிடம் இதுவரை சுமார் 2.50 கோடி ரூபாய் பணத்திற்கு மேல் வசூல் செய்துள்ளனர்.
  • பல வாடிக்கை யாளர்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் உள்ளனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் 350 வாடிக்கையாளர்களைக் கொண்டு 4 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் குறு சிறு வியாபாரிகள் பணம் சேமித்து வருகின்றனர். மேலும் பல தவணை முறைகளில் சேமிப்பு கணக்குகளை துவங்கி வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்து இதுவரை சுமார் 2.50 கோடி ரூபாய் பணத்திற்கு மேல் வசூல் செய்துள்ளனர்.

இந்த வசூல் செய்யும் பணத்தை வாடிக்கை யாளர்களின் தேவைக்கேற்ப சிறு வட்டியுடன் சேர்த்து திருப்பி வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் நடந்து வருகிறது.

ஆனால் தற்பொழுது கடந்த ஆறு மாத காலமாக சிறுசேமிப்பு காலம் முடிந்து பணம் முழு தொகையை வட்டியுடன் திருப்பி வழங்கக்கூடிய சேமிப்பு கணக்கு பூர்த்தியடைந்த நிலையில் பல வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் உள்ளனர்.

இதனால் வாடிக்கை யாளர்கள் தங்கள் அவசர தேவையான மருத்துவ செலவிற்கு கூட பணம் அவர்களிலிருந்து பெற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்கள் மட்டும் ஏறக்குறைய இரண்டு கோடிக்கு மேல் சேமிப்பு கணக்கு முழுமையடைந்து திருப்பி அளிக்காத நிலையில் உள்ளது.

அதனால் தமிழக அரசு உடனடியாக இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த நிறுவனத்தில் ஊத்தங்கரை கிளையில் பணம் கட்டிய வாடிக்கை யாளர்கள் சென்று விசாரித்தால் நாங்கள் இங்கு வசூல் செய்த பணத்தை சேலத்தில் உள்ள எங்களது அலுவலகத்தில் செலுத்தி விட்டோம். சேலத்தில் உள்ள எங்கள் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுத்து இருக்கிறார்கள்.

கடன் வாங்கியவர் திருப்பி கட்டவில்லை. அதனால் எங்களால் பணம் வசூல் செய்ய முடியவில்லை. அதனால்தான் உங்களுக்கு நாங்கள் திருப்பி பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எங்கள் வங்கியை இன்னொரு வங்கியுடன் இணைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இணைப்பு நடந்தவுடன் உங்கள் பணம் திருப்பித் தரப்படும் என கடந்த ஆறு மாத காலமாக இதே பதிலை கூறி வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

Similar News