மயிலாடும்பாறையில் புதிய கற்கால கல் திட்டை கண்டுபிடிப்பு- அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்
- கி.மு. 2000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டன என்பதை தெரிவிக்கும் வகையில், புதிய கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியம் காணப்படும்.
- ஐகுந்தம் தேன்மலையின் வடமேற்கு பகுதியில் ஒரு குகையில் புதிய கற்கால செங்காவி ஓவியம் கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரி,
தென்னிந்தியாவில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பபடும் பெருங்கற்படைகள், இரும்புக் காலத்தை சேர்ந்தவை எனக்கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அகழாய்வு நடந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் பகுதியில், இந்த கலாச்சாரக் கூறுகளான கருப்பு சிவப்பு பானை வகை மற்றும் பெருங்கற்படைகள் புதிய கற்காலத்திலேயே தொடங்கி விட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இது குறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சி யர் கோவிந்தராஜ் கூறுவதாவது:-
ஐகுந்தம் தேன்மலையின் வடமேற்கு பகுதியில் ஒரு குகையில் புதிய கற்கால செங்காவி ஓவியம் கண்டறியப்பட்டது. இது பெருக்கல்குறி போன்ற உடலமைப்பைக் கொண்ட மனித உருவம். இரும்பு கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் பெருங்கற்படை சின்னங்கள் மேலும் ஆயிரம் ஆண்டுகள் அதாவது கி.மு. 2000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டன என்பதை தெரிவிக்கும் வகையில், புதிய கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியம் காணப்படும் பாறைக்கருகிலேயே ஒரு கல்திட்டை கண்டறி யப்பட்டுள்ளது. இந்த கல்திட்டை வழக்கமான கல்திட்டை போல் இல்லாமல் மிகவும் முற்பட்டதாய் உள்ளது. இதன் காலத்தை உறுதி செய்யும் விதமாக புதிய கற்கால செஞ்சாந்து ஓவியமும் மிக அருகிலேயே காணப்படுகிறது. எனவே, மயிலாடும்பாறை அகழாய்வின் முடிவுகளும், மேற்பரப்பில் காணப்படும் செஞ்சாந்து ஓவியம் மற்றும் இந்த கல்திட்டையும், பெருங்கற்படை காலத்தின் தொடக்கம் கி.மு. 1000 என்பதிலிருந்து கி.மு. 2000 என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதாவது புதிய கற்காலத்திலேயே கருப்பு சிவப்பு பானை வகையும் பெருங்கற்படைகளும் தோன்றத் தொடங்கிவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.