கால்வாய் தூர்வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் பார்வையிட்ட போது எடுத்தபடம்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணி
- கடந்த 10 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்தது.
- தூர்வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இது குறித்த புகார்கள் நகர்மன்ற தலைவருக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதையடுத்து நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், நகராட்சிக்குட்பட்ட 4, 5, 6, 19 மற்றும் 27-வது வார்டுகளில் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியினை துரித கதியில் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் நகராட்சி துப்புரவு அலுவலர் மற்றும் ஆய்வாளர்களை குழுவாக அமைத்து, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரம், டிராக்டர்களை கொண்டு கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த பணியின் போது நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு வார்டுகளுக்கு செல்லும் நகர்மன்ற தலைவர், துப்புரவு பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பதையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
மேலும், நகராட்சி பகுதியில் எங்கும் குப்பைகள் தேங்க விடாமல், உடனுக்குடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார்.