சீறிப்பாய்ந்த மாட்டை படத்தில் காணலாம்.
காவேரிபட்டினத்தில் ஸ்ரீ மாரியம்மன், சாமுண்டி அம்மன்கோவில் விழாவில் மாடு விடுவதில் தகராறு
- பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைத்தனர்.
- ஸ்ரீ மாரியம்மன் சாமுண்டி அம்மன் மாட்டுவண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சாமுண்டியம்மன் ஊர் பண்டிகை அனைத்து சமுதாய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதமாக ஊர் திருவிழா நடைபெற்று வருகிறது. இறுதியாக தற்போது நடைபெற்று வரும் விழாவில் அனைத்து சமுதாய ஊர் பொதுமக்களும் பொங்கல் வைத்தனர்.
காவேரிப்பட்டணம் முழுவதும் உள்ள ஊர் எஜமானர்கள் தலைமையில் தாரை தப்பட்டை, கேரளா செண்டை மேளம், உடன் மாவிளக்கு ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைத்தனர்.
ஸ்ரீ மாரியம்மன் சாமுண்டி அம்மன் மாட்டுவண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது 125 கிலோ மாவிளக்கை மாட்டு வண்டி, டாட்டா ஏசி வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாரியம்மன், சாமுண்டி அம்மன் கோவிலில் மாவிளக்கு வைத்து பூஜை செய்தனர். அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ சாமுண்டி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நேற்று கூலியாட்டம் கோவிலை சுற்றி நடைபெற்றது. அப்போது ஒரு பிரிவினருக்கிடையே மாடு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால் பதட்டமான சூழ்நிலை உருவானது.
இதையடுத்து போலீசார் தலையிட்டு மேலும் பிரச்சனை எழாமல் பார்த்துக் சுமூகமாக முடித்தனர். பின்னர் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.