உள்ளூர் செய்திகள்

ஓசூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- நகரமைப்பு குழு கூட்டத்தில், மேயர் சத்யா பேச்சு

Published On 2022-08-13 15:30 IST   |   Update On 2022-08-13 15:30:00 IST
  • மோசடி செயலில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ரூ.50 லட்சம் மதிப்பில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும்.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாநகராட்சி கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நகரமைப்பு குழு தலைவர் எம்.அசோகா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய மேயர் சத்யா, மாநகர பகுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவில், மோசடி செயலில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஓசூர் பஸ் நிலையம் எதிரே ஆனந்தபவன் ஓட்டல் அருகிலிருந்து ஜி.ஆர்.டி.சர்க்கிள் வரை ரூ.50 லட்சம் மதிப்பில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும். இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நகரமைப்பு குழு தலைவர் பேசுகையில், ஓசூரில், பாகலூர் கோடு போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் பெங்களூரு-கிருஷ்ணகிரி மேம்பாலத்துடன் இணைக்க வேண்டும்.

மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வழிவகை செய்ய வேண்டும். நகருக்கு மத்தியில் நெரிசலான பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை நகரின் வெளிப்புறத்தில் அமைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாநகராட்சிக்குட்பட்ட ஏரிகளை சுத்தம் செய்து, அந்த பகுதிகளில் சிறுவர் பூங்கா அமைத்திட வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிவிதிப்பதற்கு முன்பாக, நகரமைப்புக்குழு ஆய்வு செய்த பின்னர் வரிவிதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, நகரமைப்புக்குழு சார்பில், மேயரிடம் மனு வழங்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில், எஸ்.நாராயணன், குபேரன் என்ற சங்கர், புஷ்பா ஹரி உள்ளிட்ட நகரமைப்பு குழு உறுப்பினர்கள், முதுநிலை நகரமைப்பு அலுவலர் மாறன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News