கோவையில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த நிறுவனங்கள் மீது வழக்கு
- இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை முதலீடாக பெற்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
- கோவை பொருளாதார குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை,
பொதுமக்களிடையே கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்றும் கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை சாய்பாபா காலனி பகுதியில் ட்ரீம்ஸ் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிட்டெட், காந்திபுரத்தில் ஏரோ டிரேடிங், போத்தனூரில் கொங்கு நாடு அன்னை சிட்ஸ் (பி) லிமிடெட் மற்றும் சரவணம்பட்டியில் வின் வெல்த் இண்டர் நேசனல் ஆகிய 4 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை முதலீடாக பெற்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து கோவை பொருளாதார குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே மேற்கண்ட நிறுவனத்தினரால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் வரும் 30-ந் தேதிக்குள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் செய்து கொள்ள இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள ப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.