உள்ளூர் செய்திகள்

தொழில் நஷ்டத்தை ஏற்க மறுத்ததால் தம்பியை கொன்றேன்-தேங்காய் வியாபாரி வாக்குமூலம்

Published On 2023-01-05 14:36 IST   |   Update On 2023-01-05 14:36:00 IST
  • தம்பியை கொலை செய்த மகாலிங்கத்தை கைது செய்தனர்.
  • வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தோம்.

கிணத்துக்கடவு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரை அவரது அண்ணன் மகாலிங்கம் (47) என்பவர் குத்தி கொலை செய்தார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தம்பியை கொலை செய்த மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மகாலிங்கம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நாங்கள் 2 பேரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவி மற்றும் எனது தம்பியின் மனைவி ஆகியோர் பிரிந்து சென்றனர்.

இதனால் கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் தனியாக வசித்து வந்தோம். அப்போது நானும் எனது தம்பி ஆறுச்சாமியும் தேங்காய் வியாபாரம் செய்ய திட்டமிட்டோம். அதன் படி என்னிடம் இருந்த 6 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து தேங்காய் வியாபாரத்தை தொடங்கினோம். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் நாங்கள் தற்போது எங்கள் பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தோம்.

வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் நாங்கள் தினசரி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அப்போது எங்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்படுவது வழக்கம்.

சம்வத்தன்று நாங்கள் வழக்கம் போல ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். அப்போது நான் எனது தம்பியிடம் தேங்காய் வியாபாரம் செய்ய அடகு வைத்து நகைகளை மீட்க வேண்டும் என்பதற்காக பணம் கேட்டேன். அப்போது எனது தம்பி லாபத்தில் மட்டும் தான் பங்கு கேட்பேன். நஷ்டம் வந்தால் அவருக்கு தெரியாது என கூறினார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. எனது தம்பி அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் என்னை தாக்கினான்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து எனது தம்பியை குத்த முயன்றேன்.பயந்த அவன் என்னை தள்ளி விட்டு ஓடினான்.

நான் அவரை விரட்டி சென்றேன். வடபுதூர் பஸ் நிலையம் அருகே சென்ற போது எனது தம்பி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது நான் கத்தியால் ஆறுச்சாமியின் மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் குத்தினேன். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றேன்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே எனது தம்பி ஆறுச்சாமி இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

பின்னர் தம்பியை குத்தி கொலை செய்த தொழிலாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News