காதலன் தூண்டுதலால் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தேன்- கைதான நர்சிங் மாணவி வாக்கு மூலம்
- தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தீபாவிடம் விசாரணை நடத்தினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் தீபா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் தீபா, ஒருவருடன் காதல் வலையில் வீழ்ந்துள்ளார். இதன் காரணமாக அவர் கர்ப்பமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பமாக இருந்த தீபாவிற்கு பிரசவ வலி வந்துள்ளது. அப்போது அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த குழந்தையை தனது வீட்டு வாசல் முன்பு குழி தோண்டி தீபா புதைத்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற ஒரு பெண், குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அங்கும், இங்கும் சுற்றிப்பார்த்தார். அப்போது, தீபா வீட்டு வாசலில் மண்ணுக்குள் குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததார்.
பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையை அந்த பெண் தோண்டி எடுத்த போது, குழந்தை உயிருடன் இருந்தது. உடனே குழந்தையை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குபின், மேல்சிகிச் சைக்காக குழந்தை புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தீபாவிடம் விசாரணை நடத்தினர்.
காதலனுடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமான தீபா, நிறைமாதம் ஆன உடன், குழந்தையை பெற்றெடுப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தை பிறந்த உடன் காதலனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது அவர், திருமணமாகாத நிலையில் குழந்தையினை பெற்றெடுத்ததால் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் எனவே பிறந்த குழந்தையை மறைத்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் வந்து விடு என காதலன் கூறியதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து தீபா குழந்தையை தனது வீட்டு வசாலில் குழி தோண்டி அவசர அவசரமாக உயிருடன் புதைத்துள்ளார் என தெரியவருகிறது.
போலீசார் காதலன் மற்றும் தீபா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார், வீட்டிலேயே தனக்குத் தானே அவரே எப்படி பிரசவம் பார்த்தார்?
குழந்தையை அவர் மட்டுமே புதைத்தாரா? அவருக்கு உடந்தையாக அவரது காதலன் இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.