உள்ளூர் செய்திகள்

19 வீடுகள் கட்ட போலி ஆணை தயாரித்த ஊராட்சி தலைவியின் கணவர்-நண்பர் கைது

Published On 2023-04-20 12:17 GMT   |   Update On 2023-04-20 12:17 GMT
  • வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை சிறுமாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கப்படவில்லை.
  • போலி ஆணையை அச்சடித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் வீடு கட்டுவதற்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளருமான சுபரஞ்சனியின் கணவர் கன்னியப்பன் தங்களது கிராமத்தில் 19 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளதாக மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளரான அழகுபொன்னையாவிடம் வழங்கினார். இதேபோல் பயனாளிகளுக்கும் இந்த ஆணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அழகு பொன்னையா ஆய்வு செய்தபோது அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை சிறுமாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கப்படவில்லை. ஆனால் என்னுடைய பெயரில் போலி ஆணை தயாரித்து பயனாளிகளிடம் கொடுத்து ஏமாற்றி உள்ளனர் என்று தெரவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி போலி ஆணை வழங்கியதாக ஊராட்சி தலைவியின் கணவர் கன்னியப்பன் மற்றும் 5-வது வார்டு உறுப்பினர் பிலோமினாவின் கணவரான தி.மு.க.வை சேர்ந்த வாசு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு போலி ஆணையை அச்சடித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடுகட்ட போலி ஆணை கொடுத்த விவகாரத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் மற்றும் அவரது நண்பர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News