உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கன மழை

Published On 2025-04-07 10:28 IST   |   Update On 2025-04-07 10:28:00 IST
  • மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 50.2 மி.மீ. மழை பதிவானது.
  • கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் வீடுகளில் மு டங்கினர். சேலத்தில் நேற்று 101.1 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக எடப்பாடி மற்றும் சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ள காடாக காட்சி அளித்தது. ஏற்காட்டில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவியதால் அங்கு குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாநகரில் நேற்று மாலை 6 மணியளவில் இடி, மின்னல் ஏற்பட்டது. ஆனால் லேசாான தூறலுடன் மழை நின்று போனதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 50.2 மி.மீ. மழை பதிவானது. சங்ககிரி 10.4, சேலம் மாநகர் 3, ஏற்காடு 2, ஆனைமடுவு 1 என மாவட்டம் முழுவதும் 66.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று எருமப்பட்டி, குமாரபாளையம், பரமத்திவேலூர் உள்பட பல பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் தண்ணீர் காடாக காட்சி அளித்தது. இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக எருமப்பட்டியில் 60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. குமாரபாளையம் 26.2, நாமக்கல் 4.5, பரமத்திவேலூர் 30, புதுச்சத்திரம் 4, சேந்தமங்கலம் 2, திருச்செங்கோடு 8, கலெக்டர் அலுவலகம் 7, கொல்லிமலை 10 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 151.7 மி.மீ. மழை பெய்து உள்ளது.

Tags:    

Similar News