உள்ளூர் செய்திகள்

கொட்டித்தீர்த்த மழை- மதுரையில் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்

Published On 2022-11-29 10:30 GMT   |   Update On 2022-11-29 10:30 GMT
  • மதுரை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
  • பழங்காநத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள மின் மாற்றியில் திடீரென கரும்புகை வெளியாக தொடங்கியது.

மதுரை:

மதுரை மாநகரில் நேற்று பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணியளவில் நகரில் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

அதன்பின் இரவு 7.30 மணியளவில் கனமழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

விளக்குத்தூண், கீழ வாசல், மேலவெளி வீதி, மிஷன் ஆஸ்பத்திரி, பழைய குயவர்பாளையம் ரோடு, முனிச்சாலை, பெரியார் பஸ் நிலையம், ஆனையூர், கூடல்நகர், தபால் தந்தி நகர், பழங்காநத்தம், கே.புதூர், தல்லாகுளம், மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றன. கடும் போக்குவரத்து நெரிசலால் மேற்கண்ட பகுதிகள் ஸ்தம்பித்தது.

மேலும் பாதாள சாக்கடை, கேபிள் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிலர் அதில் விழுந்து காயமடைந்தனர்.

மதுரை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

பழங்காநத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார மையம் அருகே உள்ள மின் மாற்றியில் திடீரென கரும்புகை வெளியாக தொடங்கியது. எனவே அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் தீயணைப்பு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்மாற்றியில் கரும்புகையை கட்டுப்படுத்தினர். இதற்கிடையே மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். இதன் காரணமாக அங்கு ஒரு சில மணி நேரம் மின்சாரம் பாதிக்கப்பட்டது.

கூடழலகர் கோவில் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்ததால் அந்தப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை 1 மணி நேரம் பெய்த மழையால் மதுரை மாநகரில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.

Tags:    

Similar News