உள்ளூர் செய்திகள்

வெப்பத்தின் தாக்கம் குறைந்தது: கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய மழை

Published On 2025-04-03 11:10 IST   |   Update On 2025-04-03 11:10:00 IST
  • மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பத்தின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூர், தேனி, வைகை அணை, பெரியகுளம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாட்களாக வறண்டு கிடந்த நீர் நிலைகளுக்கும், குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில் தற்போது 68 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2949 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1392 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 85.48 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 26.56 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 30.87 அடியாகவும் உள்ளது.

ஆண்டிபட்டி 30.8, அரண்மனைபுதூர் 23, வீரபாண்டி 8.4, பெரியகுளம் 9.2, சோத்துப்பாறை 12, வைகை அணை 27.2, போடி 7.2, கூடலூர் 1.6, தேக்கடி 3.6, சண்முகாநதி 2.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானலில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் தருமத்துப்பட்டி, கன்னிவாடி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட்டது. வட்டப்பாறை, கோனூர், கசவனம்பட்டி ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்த போது மின்தடை நிலவியதால் தேர்வுக்கு படித்து வந்த மாணவர்கள் அவதியடைந்தனர்.

திண்டுக்கல், சிறுமலை உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

Tags:    

Similar News