ஓசூரில் சப்-கலெக்டர் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- ஓசூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
- சப்-கலெக்டர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது.
ஓசூர்,
தமிழ்நாடு முழுவதும், நாளை(13-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நேற்று பள்ளி பேருந்துகள் சிறப்பு ஆய்வு முகாம் நடைபெற்றது.
ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். ஏ.எஸ்.பி. அரவிந்த் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், மாவட்ட கல்வித் துறை துணை கண்காணிப்பாளர் பிரபாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகாமில் கலந்துகொண்ட தனியார் பள்ளி பேருந்து களின் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு, குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும், குழந்தைகள், பேருந்துகளில் ஏறும்போதும், இறங்கும்போ தும் அவர்களிடம் பொறுமை காட்ட வேண்டும், பாதுகாப்பாக ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி சப்- கலெக்டர், ஏ.எஸ்.பி, வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் முகாமில் பேசினார்கள்.
பின்னர், சப்- கலெக்டர் தேன்மொழி, பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தார். முதல்கட்டமாக, 186 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், தீயணைப்பு அலுவலர்கள் மாது, ராஜா தலைமையில், பேருந்துகளில் எதிர்பாராத தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயல்விளக்கம் மற்றும் போலி ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. முடிவில், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் நன்றி கூறினார்.