உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்தப்படம்.

போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்ேறார்

Published On 2023-11-30 08:18 GMT   |   Update On 2023-11-30 08:18 GMT
6 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே உள்ள வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், ஆசிரியர் கருணாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு நேற்று சென்றனர். ஆசிரியர் கருணாகரன் மிகவும் நல்லவர். ஆசிரியர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டினால் அவர் மீது பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான வழக்கை நீக்க வேண்டும். அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவரை மீண்டும் இதே பள்ளியில் ஆசிரியராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை செய்யவில்லை என்றால், எங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் அவர்களை சேர்த்துக் கொள்கிறோம் என வலியுறுத்தினர்.இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததின் பேரில் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களுடன் அதே பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.அங்கு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து 10 பெற்றோர், 5 மாணவிகளை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். மற்றவர்களை வெளியில் இருக்கும்படி போலீசார் கூறினர்.அதன்படி 10 பெற்றோர், 5 மாணவிகளையும் உள்ளே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வழக்கத்தை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கூர் பள்ளியில் பயிலும் 157 மாணவர்களில் 6 பேர் மட்டுமே இன்று பள்ளிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News