உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில், தேர்வானவர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பணிநியமன ஆணை வழங்கியபோது எடுத்தப்படம்.

பெண் போலீசாருக்கு தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை: டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை

Published On 2023-03-26 02:36 GMT   |   Update On 2023-03-26 02:36 GMT
  • தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர்.
  • ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது.

மதுரை :

மதுரை விமான நிலையம் அருகே வலையபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில், தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முகாமில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு, இளைஞர்களை உற்சாகப்படுத்தி பேசினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் போலீசார் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரே கவலை, அவர்களது குழந்தைகளுக்கு தகுந்த வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான். அதில் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதி பெரிய ஆளாக வருகின்றனர். சிலர் வேலைக்காக தனியார் நிறுவனத்தை நம்பியுள்ளனர். இதற்காக தனியார் வேலை வாய்ப்பு முகாம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில், சுமார் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. அதில் 800 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு வேலை வாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடக்கிறது.

தமிழகத்தில் பெண் போலீசார் 34 ஆயிரத்து 329 பேர் உள்ளனர். அவர்கள், பெரிய, பெரிய ரவுடிகளை எல்லாம் பிடித்து வருகின்றனர். தற்போது ரவுடிகளே, பெண் போலீசாரை பார்த்து பயந்து ஓடி செல்கின்ற நிலை உள்ளது. தவறான எண்ணம் கொண்ட குற்றவாளிகள், பெண் போலீசாரை தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி பெண் போலீசாருக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலை செய்யும் இடத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் பற்றி புகார்கள் வருகிறது. காவல்துறையினரும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண் போலீஸ் நிலையங்கள் இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எங்கேயும் இல்லை. பெண் போலீஸ் நிலையங்களில், சென்ற ஆண்டு 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு, மகளிர் போலீஸ் நிலையங்கள் குறைகளை தீர்க்கக்கூடிய இடமாக இருப்பதால், பெண்கள் தற்போது தைரியமாக புகார் அளிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Tags:    

Similar News