அடுத்தடுத்து 2 இடங்களில் கைவரிசை: செல்போன்,பணம் திருடிய வாலிபர் கைது
- சட்டை பையில் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.7 ஆயிரத்தை திருடி சென்று தப்பி ஓடினர்.
- இதனை பார்த்த சரவணசங்கர் அவர்களை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து துரத்தி சென்றார். அப்போது ஒரு மடக்கி பிடித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்னாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணசங்கர் (வயது47). இவர் சூளகிரியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார்.
இந்தநிலையில் இவர் சின்னாறு பகுதியில் ஒரு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் சரவணசங்கர் நேற்று புதிய கட்டிடத்திற்கு சென்று வேலையாட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று பார்வையிட்டார். தனது சட்டையை கழற்றி கீழே உள்ள ஒரு அறையில் வைத்து விட்டு, மேல் மாடிக்கு பார்வையிட சென்றார்.
அப்போது அங்கு வந்த 2 பேர் சரவணசங்கரின் சட்டை பையில் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.7 ஆயிரத்தை திருடி சென்று தப்பி ஓடினர். இதனை பார்த்த சரவணசங்கர் அவர்களை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து துரத்தி சென்றார். அப்போது ஒரு வாலிபரை மடக்கி பிடித்தார். மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து சரவணசங்கர் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் பிடிப்பட்ட வாலிபரை ஒப்படைத்தனர். அப்போது அந்தவாலிபரிடம் போலீசார் விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த காத்தா என்கிற பூபாலன் (19) என்பதும், அவருடன் வந்தவர் வாணியம்பாடி உத்திதேந்திர பகுதியைச் சேர்ந்த ரகுராமன் (19) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர். தப்பி ஓடிய ரகுராமனை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று தென்காசி மாவட்டம் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் (34). லாரி டிரைவரான இவர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு லாரியில் இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வந்தார். சம்பவத்தன்று லாரியை ஓசூர் தொரப்பள்ளியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வண்டியை நிறுத்தி விட்டு அபுபக்கர் தனத சட்டையை கழற்றிவிட்டு தூங்க சென்றார்.
காலையில் எழுந்து பார்த்தபோது தனது சட்டையில் இருந்த செல்போன், ரூ.2 ஆயிரத்தை காணவில்லை.
இதுகுறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில் போலீசார் விசாரித்தில் அபுபக்கர் லாரியில் தூங்கி கொண்டிருந்த போது, 2 வாலிபர்கள் வண்டியின் மீது ஏறி பணம், செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.